வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய வேண்டும்

நாமக்கல், செப்.23: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன், பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆலோசித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம், நீர்வரத்து வாய்க்கால்கள், நீர்நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைநீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் துறையினர், தங்கள் பணிகளை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். உணவு வழங்கல் துறை அலுவலர்கள், மழைக்காலங்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கான உணவுப்பொருட்களை, பாதுகாப்பான இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுவினர் மற்றும் அவசர ஊர்தி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் மழை காலங்களில், குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். கால்நடைத்துறையினர் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். வருவாய்துறையினர் நிவாரண முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மாற்று இடங்களையும் அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் கிராமப்புற சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் மழைகாலங்களில் மரங்கள் விழுந்தால் அகற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு துறையின் சார்பில் ஆற்றோரங்கள் மற்றும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட கூடிய இடங்களில் அவசர கால செயல்பாடு குறித்த ஒத்திகை நடத்த வேண்டும்.

மின்வாரிய அலுவலர்கள், பருவமழைக்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்சார இடையூறுகளை பழுது பார்க்க 24 மணிநேரமும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து, வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண் 1077 மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார். கூட்டத்தில் ஆர்டிஓ.,க்கள் மஞ்சுளா, இளவரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், பிஆர்ஓ சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கலையரசு உட்பட  அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: