ராமேஸ்வரத்தில் சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக விடுதி கட்ட வேண்டும் பக்தர்கள் வேண்டுகோள்

ராமேஸ்வரம், செப்.22: ராமேஸ்வரம் கிழக்கு ரதவீதியில் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான சேதமடைந்த நிலையில் உள்ள தங்கும் விடுதி கட்டிடங்கள் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இதனை முழுமையாக அகற்றி பக்தர்கள் தங்குவதற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதிகள் கோயில் ரதவீதியில் அமைந்துள்ளது. இதில் பல விடுதிகள் மிகவும் சேதமடைந்த பழமையாகி போனதால் இதனை இடித்து அகற்றி புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் நிர்வாகம் திட்ட மிட்டது. இதனால் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள தங்கும் விடுதி கட்டிடங்களில் பக்தர்கள் தங்கிச் செல்ல அறைகள் வாடகைக்கு கொடுப்பது இல்லை.

இதனால் எந்தவிதமான பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் கட்டிடங்கள் அனைத்தும் உடைந்து சேதமடைந்து வருகிறது. இதில் கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள ராம மந்திரம் வளாகத்திற்குள் இருக்கும் காட்டேஜ் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் பாழடைந்துள்ளது. இந்த காட்டேஜ் கட்டிடங்கள் மக்கள் பார்வையில் இல்லாமல் ஒதுக்குபுறமாக உள்ளதால் இரவு நேரத்தில் இந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. கிழக்கு ரதவீதியில் எப்போதும் பக்தர்கள் கூட்டத்தினால் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் உள்ளடங்கிய நிலையில், மக்கள் பார்வையில் படாமல் இந்த கட்டிடங்கள் இருப்பதால் இதற்கு செல்லும் வழியில் பொதுமக்கள் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்கும் இடமாக மாறி விட்டது.

மேலும் இரவு நேரங்களில் இங்குள்ள இடிந்த கட்டிடங்கள் மது குடிக்கும் பாராகவும், பலானா விஷயங்கள் அரங்கேறும் மையமாகவும் மாறி விட்டது. நேற்று குறிப்பிட்ட கட்டிடங்கள் இருக்கும் பகுதிக்கு சென்ற பொழுது பகல் நேரத்திலேயே சிலர் மது அருந்தும் காட்சியை காண முடிந்தது. இந்த இடத்திற்கு பாதுகாவலர்கள் யாரும் நியமிக்கப்படாததால் சமூக விரோதிகளுக்கு இது எவ்வித தொந்தரவும் இல்லாத பாதுகாப்பான இடமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் கற்பழிப்பு கொலை போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளதாக தன்னார்வலர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த இடத்திற்கு யாரும் செல்ல முடியாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், இதனை முழுமையாக இடித்து அகற்றி பக்தர்கள் தங்குவதற்கு புதிய கட்டிடங்கள் கட்டவும் கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும் என பக்தர்கள், இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: