முசிறியில் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்ட தடை

முசிறி, செப். 20: முசிறி நகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடை உரிமையாளர்களுடன் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் மனோகரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சிவகுமார், வார்டு உறுப்பினர் முகேஷ் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். ஆணையர் மனோகரன் பேசும்போது முசிறி நகராட்சியில் சுமார் 40 இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இறைச்சி கழிவுகளை உரமாக்கும் தனியார் அமைப்பு முசிறியில் செயல்படும் மீன், கோழி, மட்டன், பீப் இறைச்சி கடைகளில் வீணாகும் இறைச்சிக் கழிவுகளை தினசரி நேரில் வந்து கடைகளில் பெற்று கொள்ள உள்ளனர்.

எனவே வீணாகும் இறைச்சி கழிவுகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். சுற்றுபுறங்கள், நீர்நிலைகள், உள்ளிட்ட இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த இறைச்சி கடை உரிமையாளர்கள் ஆணையரின் வேண்டுகோளை ஏற்றனர். இறைச்சி கடைகளில் பெறப்படும் கழிவுகள் தனியார் நிறுவனத்தின் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு அதனை பவுடர் போன்ற உரமாக்கி பைகளில் அடைத்து விவசாயத்திற்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. சுகாதார ஆய்வாளர் மலையப்பன், தலைமை எழுத்தர் ஜான்சேவியர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: