இரவு நேரங்களில் தொடர் கனமழை மூணாறில் மண்சரிவு; வீடுகள் சேதம்

மூணாறு, செப். 7: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. sஆங்காங்கே சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று பெய்த கனமழை காரணமாக வட்டவடை அரசு மேல்நிலைப் பள்ளியின் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதுபோல், வட்டவடை-கொட்டாகம்பூர் சாலையில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. மூணாறை அடுத்த பள்ளிவாசல் பகுதில் நேற்று இரவு 7 மணியளவில் பெய்த கனமழையில் பள்ளிவாசல் பாக்டரி எஸ்டேட்டில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் தொழிலாளர்கள் வசிக்கும் லயன்ஸ் வீடுகளின் பின் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களை இரண்டாம் மைல் துவக்க பள்ளி மற்றும் மரைக்கார் தங்கும் விடுதியில் தங்க வைத்தனர். இரவு நேரங்களில் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: