முசிறியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

முசிறி, செப்.6: முசிறியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முசிறி ஒன்றிய குழுத் தலைவர் மாலாராமச்சந்திரன் தலைமை வகித்து, பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராணி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், வட்டார திட்ட உதவியாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போது தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மத்தியில் அங்கன்வாடி பணியாளர்கள் வழங்கினர். பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. முடிவில் மேற்பார்வையாளர் அம்மணி நன்றி கூறினார்.

Related Stories: