தூத்துக்குடி மாவட்டத்தில் 383 பேருக்கு புதுமைப்பெண் திட்ட கல்வி உதவித்தொகை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, செப். 6: தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்  பெண் திட்டத்தில் 383 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற உள்ளனர். இதனை அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு  வந்த உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்  கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை  வழங்கப்படும் என தெரிவித்தார். அதன்படி இந்தாண்டு தமிழகத்தில் மருத்துவம்  மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் தேர்வு  செய்யப்பட்ட சுமார் 1 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்  புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில், மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட  383 மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா  நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன்,  மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி வரவேற்றார்.

இதில் மீன்வளம், மீனவர்  நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து  கொண்டு மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் பெண் கல்வியை ஊக்குவித்து அவர்களது வாழ்க்கையில் ஏற்றத்தை  உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறார்.

அதில் ஒன்றுதான் புதுமைப் பெண் திட்டம். இதன் மூலம்  மாணவிகளுக்கு தந்தையாக அவர் விளங்குகிறார். மாணவிகள் இதனை பயன்படுத்தி  உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து  மாணவிகள் நடக்க வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  பாலதண்டாயுதபாணி, தாசில்தார் செல்வக்குமார், மாநில திமுக மாணவரணி துணை  அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தலைமை செயற்குழு  உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட துணை செயலாளர் செந்தூர்மணி, ஒன்றிய  செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சுரேஷ்காந்தி, ராமசாமி, மாவட்ட  கவுன்சிலர் செல்வக்குமார் கலந்து கொண்டனர்.

Related Stories: