பூதலூரில் காயமடைந்த 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் எம்எல்ஏ சின்னதுரை வலியுறுத்தல்

தஞ்சாவூர்,ஆக.11: பூதலூரில் காயமடைந்த நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.சின்னத்துரை வலியுறுத்தி உள்ளார். கடந்த 8ம் தேதி, தஞ்சை மாவட்டம் பூதலூர் கிராமத்தில் அரசுப் பள்ளியில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் இருந்து செப்டிக் டேங்க் இடிந்துவிழுந்ததில் ராஜேஸ்வரி என்பவருக்கு இடதுகாது முழுமையாக துண்டிக்கப்பட்டது. மீனாம்பாள் என்பவருக்கு இடது கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆண்டாள் என்பவருக்கு வலது கையில் கடுமையான வெட்டுக்காயம் உள்ளது. இவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அம்பிகா, லதா, பரிபூரணம், அன்பரசி ஆகிய 4 பேருக்கு கை, கால் மற்றும் நெஞ்சு பகுதியில் அடிபட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸில் இவர்கள் கொண்டு வரப்பட்டு 7 மற்றும் 24ம் வார்டுகளில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சின்னத்துரை, தஞ்சை மாவட்டச் செயலாளர் பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் வாசு, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும், மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினர். தொடர்ந்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர், சின்னத்துரை எம்எல்ஏ கூறியதாவது, ஆக.8 அன்று காலை 11 மணி அளவில் நடந்த சம்பவத்திற்கு இதுவரை பூதலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்படவில்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. உடன் வழக்குப் பதிய வேண்டும். மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நாட்களுக்கு 100 நாள் வேலைக்கான சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: