ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

திருச்சி, ஆக.8: ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

திருச்சியில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்து பேசியதாவது: பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற 1,000 ஆசிரியர்கள் மட்டும் தகுதித் தேர்வு நிபந்தனையால் பாதிப்புக்கு உள்ளாகி கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வை காரணம் காட்டி இதுவரை எங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், பிரசவ விடுப்பு அனுமதிப்பு, தகுதி காண் பருவம், பணி வரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறை கூட அனுமதிக்கப்படாமல் உள்ளோம். கடந்த ஆட்சியாளர்களால், புரிதல் இல்லாத துறை சார்ந்த ஒருசில அதிகாரிகளால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியது. முறையாக 11 ஆண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை, சிறப்பு நிலை தகுதிகளை எட்டியிருந்தாலும் அதற்கான பணப்பலன்கள் ஏதும் இதுவரை பெற முடியாமல் உள்ள எங்களுக்கு இந்தாண்டு நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு பொருந்துமா, பொருந்தாதா என்ற குழப்பத்தில் உள்ளோம். தமிழக முதல்வர் மனது வைத்தால் தகுதித்தேர்வு எழுதுவதிலிருந்து எங்களை விடுவித்து விட முடியும். இதுகுறித்து நல்ல அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார். ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், பூபதி, சிவஞானம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: