நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை

திருச்செங்கோடு, ஆக. 8:தொடர் மழை எதிரொலியால் நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்ககை எடுக்கபட்டுள்ளது என ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:  திருச்செங்கோடு பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா போன்ற நோய்களை உண்டாக்கும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் பொருட்டு நகரில் உள்ள பழைய டயர் கடைகள், டயர் வல்கனைசிங் கடைகள், பழைய இரும்பு கடைகள்,  பழைய பேப்பர் கடைகள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் கடைகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், திருமண மண்டங்கள், தறிப்பட்டறைகள், தொழிற்சாலைகள், லாரி பட்டறைகள், அனைத்து வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைகள், அரசு அலுவலக கட்டிடங்கள், பள்ளி கட்டடிங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் உள்ள  பொருட்களில் மழை நீர் தேங்கா வண்ணம் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மழைநீர் தேங்காவண்ணம் ஒரே கூரையின் கீழ் தேவையற்ற பொருட்களை சேமித்து வைக்கலாம். அலுவலர்கள் ஆய்வுக்கு வரும்போது கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939 பிரிவுகளின்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ₹50 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை அபராதம் விதிப்பதுடன்  சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: