பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டத்தில் மாவட்டத்தில் 3,746 வீடுகள் கட்டும் பணி தீவிரம்

நாமக்கல், ஆக.8: பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டத்தில், மாவட்டம் முழுவதும் 3746 வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஒன்றிய அரசை விட, மாநில அரசே அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை, ஒன்றிய அரசு கடந்த சில ஆண்டுக்கு முன் அறிவித்தது. இதற்காக கடந்த 2018ம் ஆண்டு, பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், சாதி வாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் பேர், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது. இதில் பல்வேறு காரணங்களால், 5 ஆயிரம் பேர் தள்ளுபடி செய்யப்பட்டனர். 9 ஆயிரம் பேர் மட்டும் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது முதற்கட்டமாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நடப்பு ஆண்டில் பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3746 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வீடு கட்டுபவர்கள் பெயரில் 263 சதுரஅடி நிலம் இருக்கவேண்டும். அவர் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்கக் கூடாது. குடிசை, ஓட்டுவீடுகளில் வசிப்பவராக இருக்கவேண்டும் போன்றவை விதிகளாக உள்ளன. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மொத்தம் ₹2.60 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. மத்திய அரசு ₹72 ஆயிரம், மாநில அரசு ₹1.26 லட்சம் வழங்குகிறது. மீதமுள்ள தொகையையும் மாநில அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கி வருகிறது. மத்திய அரசு திட்டம் என்றாலும், மாநில அரசு தான் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்கு, அதிகளவில் நிதி ஒதுக்கீடு அளிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும், தகுதியானவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் கூறியதாவது:மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீடு கட்டி கொடுக்கும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில் இந்த திட்டத்தை நேரில் ஆய்வு செய்து, தரமாக கட்டி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 750 வீடுகள் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அடிப்படையில், வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசும், இந்த திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது அனைத்து கிராமங்களிலும் உள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மாநில அரசு குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்க, கலைஞரின் வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி ஒதுக்கிய உடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு திட்ட இயக்குனர் வடிவேல் தெரிவித்தார்.

Related Stories: