பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24 மணி நேர கண்காணிப்பு

நாமக்கல், ஆக.6: மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பால் நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே 120 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் காவிரை கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் நேற்று பள்ளிபாளையம் வந்தனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கை நேரில் பார்வையிட்டனர்.

பின்னர், நாட்டாக்கவுண்டம்புதூர், ஓம்காளியம்மன் கோயில் மண்டபம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினர். சென்னை பூந்தமல்லியிலிருந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர், தயார் நிலையில் உள்ள நாட்டாக்கவுண்டம்புதூர் மையத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். அவர்களிடம் பேரிடர் நேரங்களில் விழிப்புடன் செயல்படும்படி கேட்டுக்கொண்டார்.

 நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த கலெக்டர், இயல்பு நிலை திரும்பும் வரை முகாம்களிலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டார். முகாமில் உள்ள மருத்துவர் குழுவினரை சந்தித்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கும்படி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், கோட்டாட்சியர் இளவரசி, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத், தாசில்தார் தமிழரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மோகனூர்: மோகனூர் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் ராமலிங்கம் எம்எல்ஏ ஆய்வு பணியில் ஈடுபட்டார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார், மோகனூர் பிடிஓ.,க்கள் அருள்திருமாலன், தேன்மொழி, செயல் அலுவலர் கோமதி உள்ளிட்டோருடன் சென்று வெள்ளம் சூழ்ந்த ஒருவந்தூர், பாவடித்தெரு, அசலதீபேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்களை, மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும், ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட திமுக அவைத் தலைவர் உடையவர், செல்லவேல், வனிதா மோகன்குமார், சரவணகுமார், சுகுமார், ராமலிங்கம், முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் ஆற்றுப்படுகை அருகில் செல்லாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம், பள்ளிபாளையம், மொளசி, ஜேடர்பாளையம், வேலூர் மற்றும் மோகனூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளில், கரையோர பகுதிகளில் டிஎஸ்பி தலைமையில், காவல் துறையினர் 8 குழுக்களாக பணியில் அமர்த்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவைச் சேர்ந்த 22 பேர், மாநில பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் அனைத்து வகையான மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர், வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.  காவிரி கரையோர மக்கள், வெள்ள பாதிப்பு சம்பந்தமாக உதவிகள் தேவைப்படுவோர், காவல் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 04286-280007, மொபைல் எண் 94981-81216 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு எஸ்பி., சாய்சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

Related Stories: