திருவெறும்பூர் அருகே குழந்தை திருமணம் செய்த இருவர் மீது போக்சோ வழக்கு

திருவெறும்பூர், ஜூலை 29: திருவெறும்பூர் குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அயன்புத்தூர் காவேரி நகரை சேர்ந்த 15 வயது சிறுமி, 7ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 மாதத்திற்கு முன் தாயிடம் சண்டையிட்டு கோபித்து கொண்டு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அச்சிறுமியின் அத்தை திலகா சிறுமியை அழைத்துக்கொண்டு பண்டகப்படி கிராமத்திற்கு சென்றார். அவருக்கு வேப்பந்தட்டை நற்குன்றத்தை சேர்ந்த வரதராஜ் என்பவரோடு குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து தற்போது அச்சிறுமி 9 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் மோகன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வரதராஜ், திலகா ஆகிய இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: