தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் 10,008 எலுமிச்சை பழங்களால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமார் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 10,008 எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மேலவீதியில் பிரதாப வீர ஆஞ்சநேயர் எனப்படும் மூலை அனுமார் கோயில் உள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோயில்களுள் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. மூலை அனுமார் கோயிலில் சனீஸ்வர பகவான் உள்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். தொடந்து 18 அமாவாசைகள் 18 அகல் தீபம் ஏற்றி 18 முறை கோயிலை வலம் வந்து 18,56,108 எலுமிச்சை பழங்களால் மாலை சாற்றி வழிபட்டால் சனி தோஷம் உட்பட நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு லட்சம் ராமநாமம் ஜெபம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6மணிக்கு 10,008 எலுமிச்சை பழங்களான சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதையடுத்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலை அனுமாரை  வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: