திருப்பூர் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம்

திருப்பூர், ஜூலை 27: உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். பின்னலாடை, கறிக்கோழி, காடா உற்பத்தி, எண்ணெய் உற்பத்தி, அரிசி ஆலைகள் என தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக திருப்பூர் மாவட்டம் இருப்பதால், இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்களும் லட்சக்கணக்கில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறவர்களுக்கு மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும். இங்கு மாதிரிகள் ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரிக்கும் காலத்தில் பரிசோதனை முடிவுகள் பலருக்கு கிடைக்க தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பரிசோதனை முடிவுகளை விரைவாக பொதுமக்கள் தெரிந்து கொள்ள மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களை அரசு மருத்துவமனையில் அமைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படுகிறது. கட்டிட மதிப்பு ரூ.15 லட்சம் செலவிலும், உபகரணங்கள் மற்றும் கருவிகள் என ரூ.1.5 கோடி மதிப்பில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சென்னையில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மற்றும் வேல்விழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறியதாவது:உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பரிசோதனை விவரங்களை திருப்பூருக்கு அனுப்பிவைத்து, ஆய்வு செய்து முடிவு தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா பரிசோதனை ஆய்வகம் உடுமலையில் அமைவதால், அந்த பகுதிகைளை சேர்ந்த பொதுமக்களுக்கு விரைவாக கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவரும். என்றார்.

Related Stories: