புதர்மண்டி பயன்பாடில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமான திருவாலங்காடு உழவர் சந்தை

திருத்தணி: திருவாலங்காட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய உழவர் சந்தையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி அடுத்த திருவலாங்காடு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இந்த சந்தை மூலம் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவிக்கின்ற தோட்டப் பயிர்களான வெங்காயம், தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை பறித்து உழவர் சந்தையை கொண்டுவந்து விற்பனை செய்ய தொடங்கப்பட்டது.

அதன்படி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கும் நேரடியாக விற்பனை செய்யும்போது அவர்களுக்கு உரிய லாபத்துடன் வருமானம் கிடைத்தது. இதேபோல் பொதுமக்களும் இந்த சந்தையில் காய்கறிகள் வாங்கும்போது குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

இந்நிலையில், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட உழவர் சந்தையை மூடுவிழா நடத்திவிட்டது. இதனால் அந்த பகுதி தற்போது டாஸ்மாக் பாராகிவிட்டது. அதில் குடிமகன்கள் மதுபானம் குடித்துவிட்டு அங்கேயே மதுபாட்டில்களை போட்டுவிட்டு நாசம் செய்கின்றனர். மேலும் புதர்மண்டி கிடப்பதால் அந்த பகுதி தற்போது சமூக விரோத கும்பல்களின் கூடாரமாக மாறிவிட்டது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மூடப்பட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய திருவாலங்காடு உழவர் சந்தையை சீரமைத்து மீண்டும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வசதி பெறும் வகையில் திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: