அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி, ஜூன் 25: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட தம்புரெட்டி பாளையம், ராகவரெட்டி மேடு, கம்மவார்பாளையம் உள்ளது.  இந்த, கிராமங்களில் ஏரி கால்வாய், வண்டிப்பாதை, மந்தவெளி, மேய்க்கால் புறம்போக்கு வகைப்பாட்டை சேர்ந்த 100 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  இதில்,  விவசாயம், தோப்புகளை வைத்து லாபம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த நிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலையை பெண்களுக்கு வழங்க வேண்டும், என அப்பகுதியை சேர்ந்த 13 மகளிர் குழுக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் மட்டும் அல்லாது முதல்வரின் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து, இதுகுறித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். இதில், அப்பகுதி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் சேர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்கல்வராயன் தலைமை தாங்கினார். நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட தலைவர் கே.கஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஜெ.அருள்,

மாவட்ட தலைவர் என்.ஜீவா, மாவட்ட பொருளாளர் கே.முருகன், ஒன்றிய செயலாளர் என்.ராஜேஷ்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் ராமன் சமரச ேபச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: