மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

நாமக்கல், ஜூன் 14: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். நாமக்கல் மாவட்டத்தில், கோடை விடுமுறைக்கு பின், நேற்று அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. 1 முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் துவங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரை ஆசிரிய, ஆசிரியைகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாமக்கல் நகராட்சி கோட்டை துவக்கப்பள்ளிக்கு வந்த குழந்தைகளை, ஆசிரியைகள் பலூன் கொடுத்து வரவேற்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் நேற்று,  மாணவ, மாணவியருக்கு இலவச பாடபுத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டன.

இதையொட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நேற்று பல்வேறு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு  மேற்கொண்டார். அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 மற்றும் 9ம் வகுப்புக்கு நேற்று மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றது. முதல் நாளில் மாணவ, மாணவியர் பள்ளிக்கு உற்சகாகமாக வந்தனர். நேற்று பாடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு கதைகளை ஆசிரியர்கள் கூறி அவர்களை உற்சாகம் அடைய செய்தனர்.

குமாரபாளையம்:    குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதல் நாளில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தலையில் குல்லா அணிவிக்கப்பட்டு, பூங்கொத்துகளும், இனிப்பும் வழங்கப்பட்டது. மேலும், புதிய மாணவர் சேர்க்கையும் துவங்கியது. நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதே போல், பள்ளிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், மேலாண்மை குழு நிர்வாகி குளோப்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: