அங்கக வேளாண்மையில் நுண்ணுயிர் உரம் பயன்பாடு

திருச்சி, ஜூன் 14: அங்கக வேளாண்மையில் நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும்போது மண்ணின் வளம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து திருச்சி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அறிவழகன் கூறியதாவது: அங்கக வேளாண்மையில் பயன்படும் இடுபொருட்களில் நுண்ணுயிர் உரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நுண்ணுயிர்கள் உரங்களாக மட்டுமன்றி அங்கக வேளாண்மையில் பயன்படும் இடு பொருட்களான தொழுவுரம், மக்கு உரம், பஞ்சகாவியா ஆகியவை உற்பத்தி செய்வதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. நுண்ணுயிர் உரங்களில் தழைச்சத்தை நிலைநிறுத்துபவை, மணிச்சத்தை கரைப்பவை, சாம்பல் சத்தை அளிப்பவை மற்றும் நுண்ணூட்ட சத்தை கரைத்து அளிப்பவை என ஒவ்வொரு சத்துக்களுக்கென்றும் ஒரு நுண்ணுயிர் உரம் உள்ளது. பெரும்பாலும் பாக்டீரியா இனத்தை சேர்ந்த நுண்ணியிர்களும், நீலப் பச்சைப்பாசிகளும் தழைச்சத்தை நிலை நிறுத்தும் திறன் கொண்டவை. மணிச்சத்தை கரைப்பதில் பேசில்லஸ், சூடோமோனஸ் பாக்டீரியாக்களும் மணிச்சத்தினை அதிகளவில் உறிஞ்சி பயிர்களும் தருவதில் வேர் உட்பூசணங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் சில நுண்ணுயிர்கள் தழைச்சத்ததை நிலை நிறுத்துவதோடு பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கிகளான இன்டோல் அசிட்டிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவைகளை உற்பத்தி செய்து பயிர்களில் அதிக வேர்களும், தூர்களும் தோன்றி துரித வளர்ச்சி அடைய உதவுகிறது. பயிர்களுக்கு ஏற்ற பயன்பாட்டை பொருத்து பாக்டீரியா உயிர் உரங்கள், பூஞ்சாண உயிர் உரங்கள் மற்றும் பாசி வகை உயிர் உரங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. பாசி வகை உயிர் உரங்கள் பொதுவாக நெல்லுக்கென்றும் பூஞ்சாண உயிர் உரங்கள் தோட்டக்கால் பயிர்களுக்கும் மற்றும் மர பயிர்களுக்கும், பாக்டீரியா உயிர் உரங்கள் இதர பயிர்களுக்கும் பயன்படுகிறது. நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்துவதால் 30 சத தழைச்சத்தும் 20 சத மணிச்சத்தும் சேமிக்கப்படுகின்றன.

மேலும் நீலப் பச்சைப் பாசிகள் நெல் சாகுபடிக்கு ஏற்ற பாசி வகை நுண்ணுயிர் உரம் ஆகும். நீலப்பச்சைப் பாசியானது ஹெட்டிரோசிஸ்ட் என்னும் தனித்துவம் வாய்ந்த செல்கள் மூலம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலைப்படுத்துவது மட்டுமல்லாது, இப்பாசி வகைகள் மண்ணின் கரிமத் தன்மை மற்றும் அங்கக சேர்மங்களின் அளவு ஆகியவற்றை அதிகப்படுத்தி மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. மண் கலந்த நீலப்பச்சை பாசி துகள்கள் ஒரு எக்டேருக்கு 10 கிலோ என்றளவில் நிலத்தில் தூவ வேண்டும். நீலப்பச்சை பாசியை நடவு செய்த 10வது நாள் நெல் வயலில் இடுவது சிறந்தது. இதன்மூலம் 10 கிலோ முதல் 30 கிலோ வரை தழைச்சத்து கிடைக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து 3 அல்லது 4 பருவங்களுக்கு நெல் வயலில் இடுவதால் மண்ணின் தரத்தை மேம்படுத்தலாம். எனவே நுண்ணுயிர் உரங்களை விதை அல்லது மண்ணின் வழியாக அளிக்கும்போது பயிர்களுக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்க உதவி செய்கிறது.. இவ்வாறு நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் மண்ணில் இருந்து ஊட்டசத்துக்களை எளிதில் எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.

Related Stories: