கெங்கவல்லி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீ விபத்து

கெங்கவல்லி , ஜூன் 11: கெங்கவல்லி அடுத்த நடுவலூர் ஊராட்சி 5வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(70). இவரது மனைவி ராணி(65). விவசாய கூலித் தொழிலாளர்களான இருவரும், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை 3 மணியளவில், கந்தசாமியின் குடிசை வீட்டினுள் இருந்து திடீரென கருகிய வாடை வந்தது. அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டை திறந்து பார்த்த போது, உள்ளே தீப்பற்றி எரிந்ததுடன், புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்த தகவலின் பேரில், விரைந்து வந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து, அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பீரோவில் வைத்திருந்த ₹2 லட்சம் ரொக்கம், 2 பவுன்  நகை, வீட்டின் பத்திரம், துணிமணிகள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சேதமானதாக கந்தசாமி தெரிவித்தார். தீ விபத்து குறித்த தகவல் அறிந்த நடுவலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மூக்கன், துணை தலைவர் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர் இளையராஜா, அன்புரோஸ் ஆகியோர், கந்தசாமி குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், ஆர்ஐ குமார் ஆகியோர், நேரில் ஆய்வு செய்து அரசின் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: