நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

நெல்லை, ஜூன் 4: நெல்லை தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் 60 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நேற்று துவங்கியது. நெல்லை தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு மதவக்குறிச்சி குறுவட்டத்திற்கு உட்பட்ட புதூர், உகந்தான்பட்டி, சீதபற்பநல்லூர், சிறுக்கன்குறிச்சி, கருவநல்லூர், சிவனியார்குளம், துவராசி, வாகைகுளம், திருப்பணிகரிசல்குளம், திருப்பணிநெல்லையாபுரம், கருவேலன்குளம், துலுக்கர்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பெறப்பட்ட 45 மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப்பட்டா 18 பேருக்கும், அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த 13 பேருக்கு அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வரன்முறை செய்து பட்டாக்கள் வழங்கப்பட்டது. மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, 9 பேருக்கு குடும்ப அட்டைகள் என மொத்தம் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நிலஅளவை) வாசுதேவன், கலெக்டர்  அலுவலக மேலாளர்  (பொது) வெங்கடாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா, தோட்டக்கலை துறை துணை இயக்குநர்(பொறுப்பு) வாசுதேவகி, நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: