திருச்செங்கோட்டில் ரிங் ரோடு அமைவது உறுதி

திருச்செங்கோடு, ஜூன் 4: திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க துவக்க விழா, குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டிகள் பணி துவக்கம், தூய்மை பணியாளர்கள், இல்லத்தரசிகளை கௌரவித்தல் ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். நகராட்சி மேலாளர் குமரேசன் வரவேற்றார். முன்னாள் நகரமன்ற தலைவர் நடேசன், கொமதேக மாவட்ட செயலாளர் நதிராஜவேலு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழக முதல்வர், பொதுமக்களின் நலனுக்காக நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதே போல், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திருச்செங்கோடு மக்களின் அவசியத் தேவையான ரிங் ரோடு விரைவில் அமையும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன,’ என்றார்.

தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள், இல்லத்தரசிகளுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், பேட்டரி வண்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். தூய்மை பணியாளர்கள் ஊர்வலமாகச் சென்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, நகராட்சி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு எம்எல்ஏ ஈஸ்வரன் மலரஞ்சலி  செலுத்தினார். இதில், வக்கீல் சுரேஷ்பாபு, தமாகா மாவட்ட தலைவர் செல்வகுமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: