திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் வங்கிகள் ரூ.10,839.86 கோடி கடன் வழங்க இலக்கு

திருச்சி, மே 28: திருச்சி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான ஐஓபி மற்றும் மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, திருச்சி மாவட்டத்திற்கான நடப்பு நிதியாண்டு (2022-23) திட்ட அறிக்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் ரூ.10,839.86 கோடி முன்னுரிமைக்கடன்கள் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கியுடன் இணைந்து, (2022-23) நிதி ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, இத்திட்ட அறிக்கையில் பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்க, வழிவகைகள் கூறப்பட்டுள்ளன.

கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.6,068.70 கோடி, குறு சிறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,821.45 கோடி, வீட்டுக்கடன்கள் ரூ.1,441.90 கோடி, கல்விக்கடன் ரூ.450.48 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தி துறை ரூ.98.99 கோடி, சமூக உள்கட்டமைப்பு துறை ரூ.183.75 கோடி மற்றும் இதர முன்னுரிமை கடன்கள் ரூ.729.35 கோடி, ஆக மொத்தம் ரூ.10,839.86 கோடி கடன் வழங்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.

கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் சிவராசு, வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி முதன்மை மண்டல மேலாளர் வேலாயுதம் பெற்றுக்கொண்டார். கலெக்டர் அனைத்து வங்கிகளிடமும், விவசாய தவணை கடன்கள், சுய உதவிக்குழு கடன்கள் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் கடன்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யுமாறும், அரசு நிதியுதவி சார்ந்த கடன்களை, வங்கிகள் காலவரையரைக்குள் பயனாளிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதில், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரமேஷ்குமார், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் குமரன், மாவட்ட மேம்பாட்டு மேலாளர் நபார்டு வங்கி மோகன்கார்த்திக், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி முரளிதரன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: