கே.ஆர்.பி.அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி, மே 27: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமாரிடம் மனு அளித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ஆண்டு கோடை மழை பெய்ததால், கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணைகள் நிரம்பி, பாரூர் ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக வைகாசி மாதத்தில் முதல்போக சாகுபடிக்கு, கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால், நெல் நாற்று விட்டு, 20 நாளில் நடவு செய்து, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் மழைக்கு முன்பே நெல் அறுவடை செய்யலாம். தற்போது அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி உள்ளதால், இந்த மாதத்தில் முதல்போக சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை சந்தித்து மனு வழங்கினோம். விரைவில் வலதுபுற வாய்க்கால் மற்றும் இடதுபுற வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என கூறியுள்ளார். மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீரை திறந்து வைத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: