கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி பவர் டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக் 10ம் தேதி துவக்கம் சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர்,மே27: சைமா சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கங்கள் இடையே கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 8 கட்டமாக இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் நேற்று திருப்பூரில் நடந்தது. இதில் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாகராஜ், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணைச்செயலாளர் பொன்சங்கர் மற்றும் பொருளாளர் சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது 75 சதவீத கூலி உயர்வு கேட்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது முதல் ஆண்டு 20 சதவீதம், 2வது ஆண்டு முதல் 4வது ஆண்டு வரை ஆண்டுக்கு 10 சதவீதம் என 50 சதவீத கூலி உயர்வு கேட்டும் பனியன் உற்பத்தியாளர்கள் இன்னமும் சரியான பதில் அளிக்காமல் இருக்கிறார்கள். இதனால் வருகிற 10-ந் தேதிக்குள் பனியன் உற்பத்தியாளர்கள் கூலி உயர்த்தி ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், பவர் டேபிள் நிறுவனங்களில் உற்பத்தியை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: