பேய் பிடித்ததாக கூறி கோயிலில் தங்க வைக்கப்பட்ட பெண் திடீர் சாவு

பண்ருட்டி, மே 24:   பண்ருட்டி அருகே சேமகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சீத்தா(27). இருவருக்கும் திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களாக சீத்தா உடல்நலமின்றி இருந்து வந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனேதும் ஏற்படவில்லை. அவரது உறவினர்கள் அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி அங்குள்ள அய்யனார் கோயிலில் தங்க வைத்தால் சரியாகும் என கூறியுள்ளதை நம்பி அய்யனார் கோயிலில் தங்க வைக்கப்பட்டார். அங்கு திடீரென சீத்தா மயங்கி விழுந்தார்.  

 உறவினர்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருதுவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சீத்தாவின் தாய் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவருக்கு திருமணமாகி 5 வருடம் மட்டுமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்காக அறிக்கை அனுப்பி உள்ளனர்.

 மூதாட்டி திடீர் சாவு: பண்ருட்டி அருகே ஒறையூரை சேர்ந்தவர் தமிழரசி(65). இவர் கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து மளிகை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு உறவினர்கள் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலில் மயங்கி விழுந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. புதுப்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் உறவினர்கள் செல்வதற்கு முன்பே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசி இறந்துவிட்டதாக புதுப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: