ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ்: அரசாணை வெளியீடு

சென்னை: ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, ‘‘ தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடரும் பொருட்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 8ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கும் 10ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழும், 10ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சியினை 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்களுக்கும், 10ம் வகுப்பு முறையாக பயின்று தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழும் மற்றும் ஓராண்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் ஒருங்கே பெற்றவர்களுக்கும் 12ம் வகுப்பிற்கு  இணையான கல்விச் சான்றிதழும் பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி  சான்றிதழ் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது. அதன்படி 8ம் வகுப்பு படித்து ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்றும், 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களுக்கு 12ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழும் வழங்கப்படும். ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி பயில மட்டுமே இந்த இணை சான்றிதழ் பயன்படும். அரசு வேலைவாய்ப்புக்கு இணை சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது.

Related Stories: