மாவட்டத்தில் திட்டப்பணிகள்: பேரூராட்சிகளின் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரணி மற்றும் நாரவாரிகுப்பம் ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சிகளின் ஆணையர் இரா.செல்வராஜ் ஆய்வு செய்தார். மீஞ்சூர் பேரூராட்சி வார்டு, அரவிந்த் நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ₹160 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டு சாலையினை உயர்த்தி மழைநீர் தேங்காதவாறு இருபுறமும் சாய்வாக சாலையை அமைக்குமாறு அறிவுரைகள் வழங்கினார். பிறகு ஆர்.ஆர். பாளையத்தில் உள்ள பழைய குப்பைக்கழிவுகளை ₹18.50 லட்சம் மதிப்பீட்டில் தரம் பிரிக்கும் பணி முடிக்கப்பட்டுளதை ஆய்வு செய்தார்.

கும்முடிப்பூண்டி பேரூராட்சியில் முஸ்லிம் காலனியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ₹19.60 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.

ஆரணி பேரூராட்சி பி.பி.சாலையில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளம் மீட்பு பூங்காவினை ஆய்வு செய்து, அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கப்பட வேண்டுமெனவும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றிடவும், மக்காத குப்பைகளை தரம் வாரியாக பிரித்து தீர்வு செய்திடவும் அறிவுறுத்தினார்.

நாரவாரிகுப்பம் பேரூராட்சி, சோத்துப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி செய்யப்படுவதை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ச.கண்ணன், உதவி செயற்பொறியாளர் உ.சரவணன், செயல் அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: