புதிய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி காரைக்குடி நகர்மன்ற தலைவர் உறுதி

காரைக்குடி, மே 10: காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தரப்படும் என நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தெரிவித்தார். காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டு உட்புறம் பகுதி மற்றும் இலவச கழிப்பறைகளை நகர்மன்ற தலைவர் முத்துத்துரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி நகரின் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்தும் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பைகளை அகற்ற பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

புதிய பஸ் ஸ்டாண்டு பகுதி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாததால். அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் கிடப்பில் கிடந்துள்ளது. பயணிகளின் தேவைக்கு வைக்கப்பட்டு செயல்படாமல் உள்ள குடிநீர் ஆர்.ஓ பிளான்ட் சரி செய்யப்படும். இலவச கழிப்பறைகள் தினமும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்படும். பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சென்னை பஸ் நிற்கும் இடத்தில் புதிய இலவச கழிப்பறை கட்டப்படும். புதிதாக ஆர்.ஓ பிளான்ட் அமைக்கப்படும் என்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், சித்திக், துப்புரவு ஆய்வாளர் சுந்தர், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், உதவியாளர் பாண்டி, சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: