பழநியில் வெளுத்து வாங்கிய கனமழை

பழநி, ஏப். 23: பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2 நாட்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் பழநி பகுதியில் கனமழை பெய்ய துவங்கியது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் பழநி நகரில் வீசி வந்த அனல் காற்று நீங்கி குளிர்காற்று வீச துவங்கியது.

நேற்று காலை 10 மணி வரையிலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டு வந்தது. திடீர் கனமழையால் பழநி-கொடைக்கானல் சாலையில் வண்ணாத்தி ஓடை பகுதியில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் தேங்கிய மண்ணை அப்புறப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. திடீர் மழையால் பழநி பகுதியில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பழநி பகுதியில் ஆங்காங்கே உழவுப்பணிகள் மேற்கொண்டு விவசாயிகள் கோடை விவசாயத்திற்கு தயாராகி வருகின்றனர்.

Related Stories: