ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலிக்கு கத்தியால் சரமாரி வெட்டு ரயிலில் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை: திருவாலங்காடு அருகே பரபரப்பு

திருத்தணி: திருவாலங்காடு அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கத்தியால் வெட்டிவிட்டு கள்ளக்காதலன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அருகே பாகசாலை காலனியை சேர்ந்தவர் ஏசு(42). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், ஏசுவுக்கும் அவரின் வீட்டு எதிரே வசிக்கும் முருகன் மனைவி ஜான்சி(30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் ஜான்சி அவரிடம் பேச மறுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஜான்சி திருவாலங்காட்டில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு தனது மாமனாருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது எல்விபுரம் இடையே வழி மறித்த ஏசு தான் கையில் வைத்திருந்த கத்தியால் ஜான்சியின் முகம் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஜான்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தப்பியோடிய ஏசு மணவூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். புகாரின்பேரில் அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: