அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் பேரவையில் ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் வலியுறுத்தல்

சென்னை, ஏப்.9: சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ எஸ்.தங்கப்பாண்டியன்(திமுக) பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட தொகுதி ராஜபாளையம் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் மாதந்தோறும் சுமார் 200 குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறக்கின்றன. இவர்களுக்கு மூச்சுத் திணறல் வந்தாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அல்லது ராஜபாளையம் வழியாக குற்றாலம், கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றாலும், விபத்து ஏற்பட்டாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டாலோ அறுவை சிகிச்சை செய்ய மதுரைக்கோ, பாளையங்கோட்டைக்கோ, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கோ கொண்டு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதனால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், சங்கரன்கோவில், சாத்தூர், வாசுதேவநல்லூர், வில்லிபுத்தூர் போன்று, தொகுதியின் மையமான இடம் ராஜபாளையம். ராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் வருடத்திற்கு ஏழாயிரம் மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியர்களின் நலன் கருதி ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம், அதிக மக்கள்தொகை கொண்ட தொகுதியாகும். இத்தொகுதி, வணிகர்கள், சிறு தொழில் வியாபாரிகள் மற்றும் அதிகமான தொழிற்சாலைகள் கொண்ட தொகுதியாகும். இத்தொகுதியிலுள்ள மக்கள், பட்டா வாங்குவதற்கு, சிறு தொழில் செய்வதற்கு, தொழில் சம்பந்தப்பட்டவற்றிற்கு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாத்தூர் நகரத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ராஜபாளையம் தொகுதி மக்களின் நலன் கருதி ராஜபாளையம் தொகுதியிலே, தாலுகா ஏற்கெனவே செயல்பட்டு வந்த சிவகாசி கோட்ட அலுவலகத்திலே மீண்டும் இணைத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வேண்டும். வில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. அதில் 1 லட்சத்து 16 ஆயிரம் வாகனங்கள் ராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்தது. வில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து கழகத்தில், ராஜபாளையம் தொகுதிக்கும், வில்லிபுத்தூர் தொகுதிக்கும் இடைவெளி இருந்தது. கடந்த ஆட்சியாளர்களால் ராஜபாளையத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணன்கோவில் அருகில் மாற்றிவிட்டனர். ராஜபாளையம் தொகுதியில் உள்ள மக்கள், பெண்கள், மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ராஜபாளையம் தொகுதி மக்களின் நலன் கருதி ராஜபாளையத்தில் தனியாக புதிய வட்டாரப் போக்குவரத்துக் கழகத்தை அமைக்க வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் இளைஞர்களின் நலன் கருதி சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: