ஊட்டி, மார்ச் 26: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 2021-22ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதிற்காக தேர்வு செய்யும் செய்முறைகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் அரசாணையில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, 2021-22ம் ஆண்டிற்கான விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகளிடமிருந்து வட்டார இயக்க மேலாண்மை அலகிலிருந்து ஏப்ரல் 5ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலித்து 6 காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்து தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துக்களை உரிய ஆவணங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும் இறங்கு வரிசைபடி பட்டியல் தயார் செய்ய வேண்டும். முதல் மதிப்பெண் வாங்கிய சமுதாய அமைப்புகளை மாவட்ட அளவில் திட்ட இயக்குநர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் விண்ணப்பித்த சமுதாய அமைப்புகளின் கருத்துக்களை நேரில் ஆய்வு செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். இம்மாதம் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை வட்டார அளவில் விண்ணப்பங்கள் பெறுதல் (5 நாட்கள்) நடக்கும். ஏப்ரல் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை வட்டார அளவில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்படும். ஏப்ரல் 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை மாவட்ட அளவில் கருத்துக்கள் ஆய்வு செய்தல், மாவட்ட குழுவுக்கு பரிந்துரைத்தல் ஆகியவை நடக்கும். 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாவட்ட அளவிலான கூட்டம் நடத்துதல், மாநில விருதுக்கு பரிந்துரைத்தல் மற்றும் 21ம் தேதி மாநில அலுவலகத்திற்கு கருத்துகள் அனுப்பப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.