திருச்சி, மார்ச் 23: ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திர மாநிலம் விஜயநகரம் ஜாகுவா வீதியை சேர்ந்த சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் ரங்கம் வந்தனர். சாமி தரிசனம் செய்வதற்காக அம்மா மண்டபத்தில் குளித்த பின்னர் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இதில், ஜோதியின் மனைவி தண்டம்மா(62), அம்மா மண்டப சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், தண்டம்மா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட தண்டம்மாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தண்டம்மா இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சரவணபுரத்தை சேர்ந்த தர்மராஜை கைது செய்து, விசாரித்து வருகிறார்.