குன்னூர், மார்ச் 10: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப காடுகளில் பழங்கள் காய்த்துள்ளன. அவற்றில் முக்கியமான நாவல் பழம், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. அவற்றை உண்ண கரடி, யானை உள்ளிட்டவை அதிகளவில் வருகின்றன. இந்நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலாப்பழ மரங்கள் உள்ளன. பலாப்பழங்களை உண்பதற்காக குட்டியுடன் கூடிய ஆறு யானைகள் கூட்டமாக கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு போன்ற பகுதியில் முகாமிட்டுள்ளன.