கீழ்முதலம்பேடு ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ துவக்கினார்

கும்மிடிப்பூண்டி: கீழ்கும்மிடிப்பூண்டி அருகே கீழ்முதலம்பேடு ஊராட்சி, ஏ.என்.குப்பம் ஊராட்சிகளில் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட முகாமை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்றுமுன்தினம் துவக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் கே.சேகர் தலைமை தாங்கினார்.

இதில் கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமசிவாயம், ஊராட்சி செயலாளர் சாமுவேல், ஏ.என்.குப்பம் ஊராட்சி தலைவர் அம்மு விநாயகம், ஊராட்சி செயலாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50 மாணவர்கள், 100 மாணவிகள் என 150 பேர் பங்கேற்று, கீழ்முதலம்பேடு ஊராட்சியில் கீழ்முதலம்பேடு, ஏ.என்.குப்பம், ஆர்.என்.கண்டிகை பகுதிகளில் அரசு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், அரியத்துறை சிவன் ஆலயம் உள்ளிட்ட ஆலய வளாகங்களில் சுத்தம்செய்தல், மரக்கன்றுகள் நடுதல், மருத்துவம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை 3 நாட்கள் மேற்கொள்கின்றனர்.

முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் ப.தேவராஜ், இரா.சுபத்ராதேவி, சீ.கார்த்திகேயன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: