கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் குச்சிப்பட்டியில் 2ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாத புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்

கிருஷ்ணராயபுரம், ஜன.25: கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் குச்சிபட்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாடில்லாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குச்சிபட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த 2018-2019ம் ஆண்டு கிருஷ்ணராயபுரம் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை செயல்படாமல் உள்ளது. இது குறித்து மக்கள் கூறுகையில், இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கழிவறை முறையாக கட்டப்படவில்லை, கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை ஆகையால் தற்சமயம் அங்கன்வாடி மையப் பணியாளர்கள் எங்கள் ஊரின் டிவி ரூம் கட்டிடத்தில் தான் சமையல் செய்து வருகின்றனர். இதுவும் பழைய கட்டிடம் என்பதால் மோசமான நிலையில் உள்ளது. குழந்தைகளுக்கு அருகில் உள்ள கோயில் நாடக மேடையில் அமரவைத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: