தேவைக்கேற்ற உரமிட்டால் மட்டுமே மண்ணின் வளத்தை பெருக்கி கூடுதல் மகசூல் பெறலாம்

புதுக்கோட்டை, ஜன.22: விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்து பயிர்களுக்கு தேவைக்கேற்ற அளவில் உரமிட்டால் மட்டுமே மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.இது குறித்து புதுக்கோட்டை, வேளாண் இணை இயக்குநர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மண்ணில் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவிலும் குறிப்பிட்ட விகிதத்தில் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையிலும் இருப்பதுடன் அதிக கார அமில நிலை உவர் நிலை இல்லாமல் நல்லவடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். எனினும் உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதால் அதிகளவு சத்துக்கள் பயிர்களால் மண்ணிலிருந்து எடுக்கிறது. இதனால் சத்துக்களின் அளவு குறைந்து விடுகிறது. ரசாயன உரங்களை மட்டும் அதிகளவில் தொடர்ந்து பயிர்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை பெருமளவு பாதிக்கப்படுகிறது.

அங்கக உரங்களான தொழுஉரம், பசுந்தாள் உரம், தழைஉரம் ஆகியவற்றை போதிய அளவு இடாத காரணத்தால் மண் வளம் குறைந்துவிடுகிறது. போதிய அளவு வடிகால் வசதி இல்லாமல் பள்ளக்கால் பகுதிகளில் களர், உவர் நிலம் உண்டாகிறது. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் நிலத்தில் அதிக அளவில் இடுவதால் மண்ணுக்கு வளம் சேர்க்கும் நுண்ணுயிர்களின் அளவு குறைந்துவிடுகிறது. அதிக விளைச்சல் பெற அதிக உரம் இடுவதாலும் நுண்ணூட்டச் சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. பயிர்களில் நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீசு, தாமிரம் குறைபாடு ஏற்படும்போது அவற்றை நிவர்த்தி செய்ய மண் வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட துத்தநாக சல்பேட், இரும்பு சல்பேட், போராக்ஸ், மாங்கனீசு சல்பேட், தாமிர சல்பேட் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குடுமியான்மலையில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் தங்கள் மண் மாதிரிகளை கொடுத்து ஆய்வு செய்யலாம். அங்கு மண் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் மண்வள அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மண்வள அட்டையின் மூலம் மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்து பயிர்களுக்கு தேவையான அளவில் உரமிட முடியும். மண்ணில் உள்ள களர், அமில, உவர் மற்றும் சுண்ணாம்பு தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்வதுடன் தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச்செலவை மிச்சப்படுத்தலாம். ஒரு மண் மாதிரிக்கு ஆய்வுக் கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: