திருச்செங்கோட்டில் பழமையான கிணற்றில் மண் சரியும் அபாயம்

திருச்செங்கோடு, ஜன.21: திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் சாலையின் துவக்கத்தில் 100 ஆண்டுகள் பழமையான சின்னான் கிணறு உள்ளது. சுமார் 75 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றைச் சுற்றிலும், சுமார் 15 அடி உயரத்திற்கு கற்களால் ஆன தடுப்பு சுவர் இருந்தது. வடக்குப்புறம் ஈஸ்வரன் மற்றும் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. அருகிலேயே வீடுகள் உள்ளன. ஓராண்டுக்கு முன்பு வரை, இந்த கிணற்று நீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வழங்கி வந்தது. நேற்று முன்தினம் இரவு, கிணற்றின் கிழக்குப்புற சுற்றுச்சுவர் சுமார் 20 அடி நீளத்திற்கு இடிந்து உள்ளே விழுந்து விட்டது. இதுகுறித்து  திமுக நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில், நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் பொறியாளர் சண்முகம், உதவிப்பொறியாளர் கண்ணன் ஆகியோர், நேரில் சென்று பார்வையிட்டனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி என்பதால் இடிந்த சுற்றுச்சுவரை கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிணற்று நீரை முற்றிலும் வடித்த பின்னரே, பணிகளை துவக்க முடியும் என்பதாலும், மண் சரியும் அபாயம் இருப்பதாலும், அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: