மனைவியை கொடுமைப்படுத்திய அரசு பள்ளி ஆசிரியர் கைது மாமியார் உட்பட 3 பேருக்கு வலை செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு

செய்யாறு, ஜன.21: செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது மாமியார் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி(34). புரிசை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த சரவணப்பிரியா(26) என்பவருக்கும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே நாராயணமூர்த்தி, அவரது தாயார் கமலா, சகோதரி உமாமகேஸ்வரி, அவரது கணவர் சங்கர் ஆகியோர், வரதட்சணை கேட்டு சரவணப்பிரியாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் சரவணப்பிரியாவின் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு தம்பதி இடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நாராயணமூர்த்தி உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து, சரவணப்பிரியாவை ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த சரவணப்பிரியா மறுநாள் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இதைத்தொடர்ந்து, அவர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தினிதேவி வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் நாராயணமூர்த்தியை நேற்று முன்தினம் கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள கமலா, உமாமகேஸ்வரி, சங்கர் ஆகிய 3 பேரையும் தேடிவருகிறார்.

Related Stories: