குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை

நாமக்கல், ஜன.20: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு எதிரான குற்றமான 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு ‘பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் மற்றும் தொல்லை தருவது”, போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது ‘குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தடைச்சட்டம் -2012-”ன்படி, குற்றமாகும். 18 வயது நிறைவடையாத ஆண், பெண் குழந்தைகளை பாலியல் நோக்கத்தோடு பின்தொடர்வது, கண்காணிப்பது, சைகைக் காட்டுவது, ஆபாச படம் காண்பிப்பது மற்றும் எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பாலியல் உறவு கொள்வது உள்ளிட்ட குற்றங்களுக்கு ‘குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2012-”ன்படி, 6-மாதம் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை உண்டு. பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தில் தன்னம்பிக்கையிழந்து தங்களது வாழ்வின் முன்னேற்றப்பாதையை அடையாமல் மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து விடுவர். மேலும், விவரம் அறியவும், தகவல் தெரிவிக்கவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அலுவலகத்தை 04286 - 233103 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் கொடுப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: