அதிக வேகமாக பரவும் கொரோனா குமரியில் ஒரேநாளில் 996 பேர் பாதிப்பு

நாகர்கோவில், ஜன. 20:   குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை 996 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சளி பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை குமரி மாவட்டத்தில் 996 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5589 பேருக்கு நடந்த சளி பரிசோதனையில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 481 பேர், பெண்கள் 462 பேர், சிறுவர்கள் 53 பேர் ஆவர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 பேர், தூத்துக்குடி, தென்காசி, செங்கல்பட்டு, கேரளா மாநிலம் என தலா ஒருவர் வீதம் குமரி வந்த போது பாதிக்கப்பட்டுள்ளனர்.   அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 112 பேர், கிள்ளியூர் 45 பேர், குருந்தன்கோடு 125 பேர், மேல்புறம் 51 பேர், முஞ்சிறை 97 பேர், நாகர்கோவில் 266 பேர், ராஜாக்கமங்கலம் 90 பேர், திருவட்டார் 56 பேர், தோவாளை 60 பேர், தக்கலை 81 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு 66 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தினசரி பாதிப்பு 200யை கடந்துள்ளது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜவகர் தெருவில் ஒரே வீட்டில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு, அவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். இதுபோல் நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மதியம் வரை 80 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீட்டு தனிமையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு துறையில் பல தீயணைப்பு வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை சப்இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.  அங்கு பணியாற்றுபவர்களிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டது.

 நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, அதன் மேல்தளத்தில் செயல்படும் மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் ஒரு அதிகாரி உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் வங்கியில் பணியாற்றுபவர்களின் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். இதனால் சிறிது நேரம் வங்கி பணிகள் முடங்கியது. பினனர் வழக்கம்போல் வங்கி இயங்கியது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயமாக முககவசம் அணிந்து வருவதுடன், தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடுமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Related Stories: