முருகன் கோயில்களில் எளிமையாக நடந்த தைப்பூச திருவிழா

சாயல்குடி, ஜன.19: ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடு முருகன் கோயில், பிரப்பன்வலசை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில்கள் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமமக்கள், மாவட்டத்தின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் தை பூசத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, வேல் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தடை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள், பொதுமக்கள் இன்றி கோயில் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அர்ச்சகர்கள் மட்டும் வழக்கமான பூஜைகளை செய்தனர்.

இதனை போன்று பிரப்பன்வலசையிலுள்ள மயூராநாதன், பாம்பன் சுவாமிகள் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்தது. முதுகுளத்தூர் அருகே மேலக்கொடுமலூர் குமரன் கோயிலில் தை பூசம் திருவிழாவை முன்னிட்டு குமரன் கடவுளுக்கு நள்ளிரவு முதல் அதிகாலை வரை திருநீரு, சந்தனம் பால், நெய், இளநீர் உள்ளிட்ட 11 வகை பொருட்கள், பழங்கள், தானியங்கள் என பலவகை அபிஷேகங்கள், பூஜைகள், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. திருப்புல்லானி அருகே மேதலோடையில் பால தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் பால்குடம், காவடி, வேல் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் இன்றி வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்தது.  மேலும் மாவட்டத்திலுள்ள பிரசித்திப்பெற்ற ராமேஸ்வரம், திருஉத்தரகோசமங்கை,நயினார்கோயில், மாரியூர் உள்ளிட்ட சிவன் கோயில்களிலுள்ள முருகன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்கள் எளிமையாக பூஜைகள் மட்டும் நடந்தது. 

Related Stories: