தென்பெண்ணை ஆற்றில் திருவிழா நடத்த தடை....புனித நீரை கொண்டு வந்து அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு தீர்த்தவாரி பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை

திருவண்ணாமலை, ஜன.19: தென்பெண்ணையாற்றில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டதால், ஆற்றில் இருந்து புனித நீரை கொண்டுவந்து, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி, ஆண்டுதோறும் ரதசப்தமி தினத்தன்று கலசபாக்கம் அருகே செய்யாற்றிலும், மாசி மகம் தினத்தன்று பள்ளிகொண்டபட்டு அருகே கவுதம நதியிலும், தை மாதம் 5ம் நாளன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணையாற்றிலும் தீர்த்தவாரி நடைபெறும்.அதையொட்டி, ஆற்றுத்திருவிழாவில் நடைபெறும் தீர்த்தவாரியில் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்புக்குரியது. ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நடைபெறும் ஆற்றுத்திருவிழாவுக்கு தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த முறையும் தடை விதிக்கப்பட்டது.

எனவே, தென்பெண்ணையாற்றில் தை மாதம் 5ம் நாளான நேற்று நடைபெறுவதாக இருந்த ஆற்றுத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தென்பெண்ணையாற்றுக்கு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெறவில்லை. அதற்கு மாற்று ஏற்பாடாக, தென்பெண்ணையாற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் கம்பத்திளையனார் சன்னதிக்கு அருகே, சூல வடிவான சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி காட்சியளித்தார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, கடந்த 5 நாட்களாக அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்விலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.இந்நிலையில், தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனாலும், கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி கொண்டதற்கான சான்றுகளை காண்பிக்கும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Related Stories: