மாவட்டத்தில் ₹230 கோடிக்கு பயிர்க்கடன் தள்ளுபடி

ராசிபுரம், ஜன.9: தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அறிவிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் பயிர்கடன் பெற்ற 23,100 விவசாயிகள் பயனடைந்தனர். இதையடுத்து ராஜேஷ்குமார் எம்பியை நேரில் சந்தித்த விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் குருக்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ராஜேஷ்குமார் எம்பி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பேசியதாவது: தந்தையை போல் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் முதல்வர், விவசாயிகள் நலனில் அக்கரையுடன் செயலாற்றி, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் விவசாய கடன் சங்கங்களில், விவசாயிகள் பெற்ற பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்து மீண்டும் அவர்களுக்கு விவசாய கடன், பயிர்க்கடன் வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது. விவசாயிகள் பயிர்க்கடன் பெற விண்ணப்பம் அளித்தபோது குறிப்பிட்டுள்ள பயிருக்கும், விஏஓவிடம் பெற்ற அடங்கலில் இருக்கு பயிருக்கும்  வித்தியாசம் இருந்தது. விண்ணப்பத்தில் ஒரு பெயரை குறிப்பிட்டு, அடங்கலில் வேறு ஒரு பெயரிட்டு இருந்ததால், பயிர் கடனிலும் ஏற்றத்தாழ்வு விகிதாச்சாரங்கள் இருந்து வந்தது. இதுபோன்ற விதிமீறல்களால் நாமக்கல் மாவட்டத்தில் 23,100 விவசாயிகளுக்கு தங்களுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை பெற முடியவில்லை.

இதையறிந்த முதல்டர் இந்த விதிமீறல்களை ஒரு சிறப்பு இனமாக கருதி, விவசாயிகளுடைய துயரங்களை போக்கும் வகையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனால் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி பெறுகிறார்கள். இதில் கடன் தொகையானது நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை சுமார் ₹230 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி பெறுவதுடன், மீண்டும் அவர்களுக்கு பயிர்க்கடன் கிடைக்கக்கூடும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, பயிர்க்கடன் தள்ளுபடி கிடைத்துள்ள விவசாயிகள், ராஜேஷ்குமார் எம்பியை சந்தித்து, தங்கள் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பிள்ளாநல்லூர் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், குருக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் செந்தில்குமார், பொன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி முருகேசன், பாலமுருகன், தங்கராசு, ஒன்றிய பொருளாளர் முத்துச்செல்வன், முன்னாள் ஊராட்சி செயலாளர் காளியண்ணன், செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: