மாவட்டம் முழுவதும் 15 சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

கடலூர், ஜன. 7:  தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடைகள் அடைக்கப்படும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர, மற்றபடி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல், பஸ், தியேட்டர், சலூன் கடைகளில் 50 சதவீதம் மட்டுமே பொதுமக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடலூர் மாவட்ட எல்லையில் மாவட்ட எஸ்பி சக்திகணேசன் உத்தரவின் பேரில் பெரிய கங்கணாங்குப்பம், கண்டரக்கோட்டை, அழகியநத்தம், வான்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம், வேப்பூர், மங்கலம்பேட்டை, சின்ன காடுவெட்டி, மாமங்கலம், வல்லம்படுகை உள்ளிட்ட 15 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுவர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் பொதுமக்களை கண்காணிக்கவும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு உத்தரவுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக்கூடாது. அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

Related Stories: