அருமனை அருகே லோடு ஆட்டோவில் இருந்து விழுந்து தொழிலாளி பலி சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் தாமதம்

நாகர்கோவில், ஜன.3: அருமனை அருகே லோடு ஆட்டோவில் பயணித்த தொழிலாளி, கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் கிளீட்டஸ் (47). கூலி தொழிலாளி. கடந்த 1ம் தேதி இவர், மேல்புறத்தில் ஆக்கர்கடை நடத்தி வரும் ஆசைதம்பி என்பவருடன் வீடு, வீடாக சென்று பழைய பொருட்களை சேகரிக்கும் வேலையில் இருந்தார். இவருடன் மேலும் சிலரும் பொருட்களை சேகரித்தனர். பின்னர் அந்த பொருட்களுடன் லோடு ஆட்டோவில் மேல்புறம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மாத்தூர்கோணத்தை சேர்ந்த ரவி (45) என்பவர் ஆட்டோவை ஓட்டினார். கிளீட்டஸ் முன் பகுதியில் டிரைவர் இருக்கையில் ஓரமாக இருந்தார். மேல்புறம் குருசடி அருகே வரும் போது வேகமாக வந்த லோடு ஆட்டோவில் இருந்து தடுமாறி கிளீட்டஸ் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் தலை பயங்கரமாக வலிப்பதாக கூறி கிளீட்டஸ் மயங்கினார். உடனடியாக அவரது மனைவி மேரி மற்றும் உறவினர்கள் சிலர் சேர்ந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், வழியிலேயே கிளீட்டஸ் இறந்தது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மதியம் 2.40க்கு விபத்து நடந்த நிலையில், மாலை 4.30க்கு தான் மருத்துவமனையில் சேர்த்து அவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால், கிளீட்டஸ் உயிர் பிழைத்திருப்பார் என்று உறவினர்கள் கூறினர். இந்த விபத்து குறித்து கிளீட்டஸ் மனைவி மேரி அளித்த புகாரின் பேரில், அருமனை போலீசார் விசாரணை நடத்தி லோடு ஆட்டோ டிரைவர் ரவி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: