வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பெரியகுளம், ஜன. 1: பெரியகுளத்தில், வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி, கள்ளிப்பட்டி, கீழவடகரை, சருத்துப்பட்டி. எண்டப்புளி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த வீடு இல்லாத பொதுமக்கள் 600 பேருக்கு பட்டா வழங்கக் கோரி, கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர். அப்போது வட்டாட்சியர் உரிய விசாரணை நடத்தி, ஏழைகளுக்கு பட்டா வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், வீடு இல்லாத ஏழைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மீண்டும் மனுவும், கோரிக்கையும் விடுத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வீடில்லாத ஏழை எளியோருக்கு அரசின் இலவச பட்டா மற்றும் வீடு வழங்கி வருகிறது. இதனடிப்படையில், நாங்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெரியகுளம் சுற்று வட்டாரத்தில் உள்ள 12 கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தினர் 600 பேர், பட்டா வழங்கக் கோரி மனு அளித்திருந்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மேலும், வீடில்லாத 600 பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என மீண்டும் மனு அளித்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: