சின்னாறு அணையில் தேக்கப்படும் தண்ணீரை திறந்து விட வேண்டும் கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, டிச.28:  சூளகிரி அருகே போகிபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: போகிபுரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே ஓடும் சின்னாற்றின் குறுக்கே, கடந்த 1986ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் போது, போகிபுரம் கிராம மக்கள் சின்னாற்றை பரிசல் மூலம் கடந்து செல்லும் நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையின் பேரில், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நடப்பாண்டு அரசு நிதி ஒதுக்கி, பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையால், சின்னாறு அணையில் 75 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் உள்ளதால், பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை திறந்துவிட வேண்டும். பாலம் கட்டுமான பணிகள் முடிந்த பின்பு, அணையில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்

Related Stories: