பேரணாம்பட்டில் தொடர் நிகழ்வால் பீதி: இரவில் மீண்டும் ஏற்பட்ட நிலஅதிர்வால் தூக்கம் தொலைத்து வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

வேலூர், டிச.25: பேரணாம்பட்டில் தொடர் நிகழ்வாக நேற்று அதிகாலை மீண்டும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வேலூரில் இருந்து மேற்கு வடமேற்கு திசையில் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த இடம் தமிழக- ஆந்திர எல்லையில் சித்தூர் மாவட்டம் பலமநேர் அடுத்த ஒட்டேரிபாளையம் கிராமமாகும். நில அதிர்வால் எவ்வித பாதிப்பும் இல்லை.

இந்த நிலையில் பேரணாம்பட்டு சின்னமசூதி தெருவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். பலர் தூக்கத்தை தொலைத்து வீதிகளிலேயே அமர்ந்திருந்தனர். காலையில் எழுந்து பார்த்தபோது நில அதிர்வால் பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி இரவில் நில அதிர்வு உணரப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பேரணாம்பட்டில் அதிகாலை நிலஅதிர்வு தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் தேசிய புவியியல் ஆய்வு மையத்தில் அதுபோல் எந்த தகவலும் இல்லை. அப்படி இருந்தால் உடனடியாக தகவல் கிடைத்திருக்கும். நாங்கள் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அனுப்பியுள்ளோம்’ என்றனர்.

Related Stories: