நெல்லை, தென்காசியில் அனைத்து விவசாயிகளும் எளிதாக பயிர் கடன் பெறலாம் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பேச்சு

நெல்லை, டிச. 25: சங்கரன்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி, சங்கரன்கோவில், ஆட்கொண்டார்குளம், வீரிருப்பு ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இணைந்து பயிர் கடன் வழங்கும் முகாமை நடத்தின. நெல்லை சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் லட்சுமணக்குமார் தலைமை வகித்து பேசுகையில், \”நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் எளிய முறையில் பயிர் கடன் பெறலாம். இம்முகாம் மூலம் ரூ.5 கோடிக்கு கடன் வழங்க தீர்மானிக்கப்பட்டது. பயிர் கடன் பெறுவதற்கு 10 (1) பட்டா சிட்டா அடங்கல், ஆதார்அட்டை, ரேசன்கார்டு, பான்கார்டு, புகைப்படம், மத்திய கூட்டுறவு வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

முகாமில் 188 நபர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.103.93 லட்சத்திற்கு கடன்கள் வழங்கிட உடனடியாக அனுமதிக்கப்பட்டது. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாய பயிர் கடன், விவசாய நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், சிறுவணிகக்கடன், மாற்றுத்திறனாளி கடன், டாம்கோ, தாட்கோ கடன்கள் மற்றும் மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகளும் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

முகாமில் கூட்டுறவு சங்க தலைவர்கள் குருசாமி, அருணாசலம், முருகன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் விஜயகுமார், மோகன் மற்றும் நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளர் வேல்முருகன், மேற்பார்வையாளர்கள் ஜெயராமன், சரவணன், ரவிகுமார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர்கள் லட்சுமணன், சங்கர சுப்பிரமணியன், கணேசன் உட்பட பல கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர். இத்தகவலை நெல்லை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories: